கம்பன் பாடாத சிந்தனைகள் ⭐
வார்த்தைகளுக்கு பதிலாக வைரமும் முத்தும் கோர்த்து, கம்பன் பாடாத சிந்தனைகளை சேர்த்து, எண்சுவையைத் தூவி பாடல் சமைப்பாய் நாங்கள் சுவைக்க.
தவம் போல் இருந்து யோசிப்பாயோ? நாங்கள் தவணை முறையில் நேசிக்கத் தான் செய்கிறோம்!
வாழ்க்கையை ஏழு நிலைகளில் பாடிய ஷேக்ஸ்பியர் போல, காதலை ஏழு நிலைகளில் பாடிய நீ, தமிழின் ஷேக்ஸ்பியர் இல்லையோ?
இரட்டை அர்த்தப் பாடல்கள் என்று முகம் சுழிக்க வைக்கும் இக்காலப் புலவர்களிடையே,
"வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே,
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா?"
என்று அதிலும் தமிழும் நயமும் கலந்து நீ எழுதும் வரிகளை ரசிக்க மறுப்பவர் யாரும் உண்டோ?
"கண்கள் பார்த்தே கவி ஆனேன்"
"நீ இல்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராது"
"உன் தனிமை அறையின் தாழ் நீக்கவா?"
இன்னும் எத்தனை முறை எங்களைக் காதலில் விழ வைப்பாய்?
சிரித்துக் கொண்டே "பிறவிப் பிழை காதல் திருத்தம்" என்று காதலையே காதலில் விழச் செய்தாய்.
"குப்பை மேட்டில் ரோஜாச்செடி பூப்பதில்லையா?"
"ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால் புல்லாங்குழல் ஆகும்" என்று குப்பையிலும் காதலைத் தேடச் செய்தாய்.
"பட்டாம் பூச்சி கால்களைக் கொண்டு தான் ருசி அறியும்"
"ஓடுகிற தண்ணியில் ஆக்சிஜன் மிக அதிகம்"
அறிவியலும் உன் பேனாவில் இருந்து தப்பிக்குமோ?
உன் சின்ன சின்ன ஆசைகள் கேட்டேன், புத்தம் புது பூமி வேண்டும் என்றாய்.
மாற்றங்கள் செய்ய செங்கோல் தான் வேண்டுமோ?
எழுதுகோல் போதுமே!
"நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா?
நீ ஓடிக்கொண்டே இரு!"
"தாடிகளெல்லாம் தாகூரா? மீசைகளெல்லாம் பாரதியா?
வேஷத்தில் ஏமாறாதே தோழா!"
"தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்
தண்ணீர் குடத்தில் முடிகிறோம்."
என்று திருக்குறள் போல இரு வரிகளில் வாழ்க்கைப் பாடங்களும் தந்தாய்.
வைரமே, உன்னிடம் வேறென்ன சொல்ல?
உன் தீரா கற்பனையை,
தீரா பக்கங்களில்,
தீரா வார்த்தைகளை
தீரா மையினால் எழுதிக் கொண்டே இரு
நாங்கள் தீரா உலா போக!
writer chechoo on fire 🧿
ReplyDeleteKikibiki😂
Delete